தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கிய கதவெக 108 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணி 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
இபிஎஸ் தலைமையில் அதிமுக ஏற்கனவே 10 தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 11வது தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலில் அதிமுக 3வது இடத்தை பிடித்ததால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக வெடிக்க தொடங்கியுள்ளது.
நேற்று 17வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் இபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவும், எஸ்.பி. வேலுமணி தலைமையின் கீழ் மற்றொரு பிரிவுமாக அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு சென்றனர்.
அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக இபிஎஸ்ஸை ஆதரித்து ஓ.எஸ். மணியன், மரகதம் குமரவேல், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கேசி கருப்பணன் உள்பட 23 எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தலைமையில் தலைமை செயலகம் வந்த 24 எம்எல்ஏக்கள், சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி, கொறடாவாக சி விஜயபாஸ்கரை ஆதரித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதங்களை வழங்கினர். இதன் மூலம் அதிமுக உடைந்ததாக பரவிய தகவல் உறுதியானது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சி.வி. சண்முகம், “அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்துள்ளோம். அதிமுக காப்பற்றப்படவேண்டும் என்பதில் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறோம். அனைவரும் பொறுப்பாக ஏற்கிறோம். ஒப்புக்கொள்கிறோம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் விஜய் ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது.
முன்னதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில யோசனைகளை முன்வைத்தார். இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது திமுகவை எதிர்த்துதான். எந்த திமுகவை எதிர்த்தோமோ அந்த திமுக ஆதரவோடு என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். திமுகவோடு இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை இபிஎஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
அதனால் பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள விஜய்யின் தவெக ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். தொண்டர்கள் காப்பாற்றப்பட வேண்டும். பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும். கட்சியை மேம்படுத்த பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி விரைவில் கூட்டுவார் என நம்புகிறோம். பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறினார்.


