இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 551 மையங்களிலும், பிற நாடுகளில் 14 மையங்களிலும் நடந்த இந்த தேர்வில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் ராஜஸ்தானில் நடந்துள்ளது என தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) புகார்கள் வந்தன. அதன்படி, வினாத்தாள் கசிந்ததா என்று விசாரணை நடந்தது.
இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த என்டிஏ பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு அதை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறுதேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நீட் மறுதேர்வுக்கு கட்டணமில்லை. கடந்த முறை எழுதிய பதிவெண் தொடரும் என என்டிஏ அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு 89 முறை நீட் வினாத்தாள் கசிவு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த போதிலும் முதல்முறையாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த குளறுபடி காரணமாக திட்டமிட்டப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


