தவெக தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு நேராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆரத்தழுவி வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்று உபசரித்து பரஸ்பரம் சால்வை, பூங்கொத்து அளித்தனர். அவர்களிடம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு விஜய் வாழ்த்துகளை பெற்றார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புத்தகம் பரிசளித்தார்.
இதையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நீலாங்கரை அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரது இல்லங்களுக்கு சென்ற முதல்வர் விஜய் உடன் அவர்களும் பரஸ்பரம் சால்வை, பூங்கொத்து கொடுத்து மரியாதை அளித்து கொண்டனர்.
இந்நிலையில், 2வது நாளான இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும், முதல்வர் விஜய் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அதன் பிறகு, வேளச்சேரியில் உள்ள இல்லத்துக்கு வந்த முதல்வர் விஜயை விசிக தலைவர் திருமாவளவன் வாசலுக்கு வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
அங்கு முதல்வர் விஜய் அம்பேத்கரின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அவருக்கு திருமாவளவன் அரசியலமைப்பு முகப்பு படத்தை பரிசளித்தார்.
அப்போது தவெகவுக்கு விசிக ஆதரவு அளித்ததற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தனர்.


