தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய்யின், அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் நேற்று உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் சிறப்பு அதிகாரிக்கான பணி குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதலமைச்சரின் சிறப்பு பிரிவு அதிகரியாக நியமித்து அரசு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு அந்த நியமனத்தை ரத்து செய்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று தவெக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விசிக எம்எல்ஏ வன்னி அரசு, ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளில் இருந்து இளைஞர்கள் விடுபடும் வகையில் அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
அதே போல், தேமுதிக பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சரின் ராஜகுருவுக்கு அரசு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ராதன் பண்டிட் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் அனைவர் சார்பிலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மன்றத்தில் கண்டிக்கிறேன். உங்களுக்கு ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்று பேரவையில் விளாசி தள்ளினார்.
இது தவிர, சமூக வலை தளங்களிலும் முதலமைச்சர் பிரசாரத்தின் போது பேசிய வீடியோவை பதிவிட்டு, மக்கள் வரிப் பணத்தில் ஜோதிடர் அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை சிறப்பு அதிகரியாக நியமித்த நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.


