ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டி ராய்ப்பூரில் நேற்று, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி அணிகள் இடையே நடந்தது. இந்த போட்டி மழை காரணமாக 75 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரஹானே 19, ஆலன் 18 ரன்னில் நடையை கட்ட, அங்கிரீஷ் ரகுவன்ஷி அதிரடியாக ஆடினார்.
அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த கேமரூன் கிரீன் 32 ரன்னில் (24 பந்து) ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங், ரகுவன்ஷியுடன் இணைந்து அதிரடியாக ஆட கேகேஆர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.
இதில் 30 பந்துகளில் அரைசதம் விளாசிய ரகுவன்ஷி, ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். அவர் 46 பந்தில் 71 ரன் விளாசினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கோலி ஆரம்பத்தில் இருந்தே பந்துகளை சிதறடித்தார். 32 பந்தில் அரைசதம் அடித்த அவர் 58 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இது ஐபிஎல் போட்டிகளில் அவரது 9வது சதமாகும். இதன் மூலம், ஆர்சிபி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
கோலி 60 பந்துகளில் 105 ரன்களுடன் (3 சிக்ஸ், 11 பவுண்டரி) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த படிக்கல் 27 பந்தில் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேகேஆர் அணியில் சிறப்பாக பந்துவீசிய கார்த்திக் தியாகி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.


