சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த உடன் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகினார்.
அதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக, தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் அவர் ஆஜராகி வந்தார்.
இந்த சூழலில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, பி.எஸ்.ராமன் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அவர் விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண், அப்போதைய பீகார் மாநிலம் ராஞ்சியில் பள்ளிப் படிப்பை முடித்ததோடு, சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பும், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றவர் ஆவார்.
அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இவரது தாத்தா வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் இடம் பெற்றிருந்தார். விஜய் நாராயண் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் உறவினர் ஆவார்.
இவர், கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


