திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது, திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், என்ன ஆனாலும் சரி. சூரியன் ஒருபோதும் மறையாது, திரும்ப உதித்தே தீரும். திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவுக்கும் தவெகவுக்குமான வாக்கு சதவீத வேறுபாடு என்பது 3.52% தான். தேர்தல் தோல்வியை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படியும் அவர் தெரிவித்திருந்தார்.


