அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.9ம் தேதி புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களுடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் இடதுசாரி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி 37.34% வாக்கு சதவீதத்துடன் 35 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) 46.55% வாக்கு சதவீதத்துடன் 102 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றது.
இருப்பினும், கேரள காங்கிரஸில் நிலவும் உள்கட்சி பூசலினால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாகியும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நீடித்தது. முதல்வர் தேர்வு போட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் இறுதி முடிவு எடுப்பதற்காக டெல்லியில் நேற்றுமுன் தினம் மாலை மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு சென்ற ராகுல்காந்தி அவரிடம் ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த ஆலோசனையில் முதல்வராக வி.டி. சதீசனை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மதியம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் கேரள மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான தீபா தாஸ்முன்ஷி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக கேரளத்தில் நீடித்து வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. கேரள முதல்வர் வி.டி சதீசனின் பதவியேற்பு விழா வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, எம்பி., காங்கிரஸ் மாநில முதல்வர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் விஜய்யும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 18ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராகும் சதீசனுடன் 21 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது.


