நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 551 மையங்களிலும், பிற நாடுகளில் 14 மையங்களிலும் நடந்த இந்த தேர்வில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் ராஜஸ்தானில் நடந்துள்ளது என தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) புகார்கள் வந்தன. அதன்படி, வினாத்தாள் கசிந்ததா என்று விசாரணை நடந்தது.
இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு உறுதிபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த என்டிஏ பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு அதை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்பதாகவும், தேர்வு அமைப்பில் உள்ள பல குறைபாடுகளை சரி செய்ய தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீட் முறைகேடு நடைபெற்றதாக தெரிய வந்தவுடன் தேர்வை ரத்து செய்வதே சிறந்தது என அரசு முடிவு செய்தது. நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ முழுமையான விசாரணை நடத்தும். தவறு செய்தது தேர்வு முகமை அதிகாரிகளாக இருந்தாலும் தப்ப முடியாது. இம்முறை எந்த முறைகேட்டையும் அனுமதிக்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதான், நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. நீட் மறுதேர்வை மாணவர்கள் கட்டணமின்றி எழுதலாம். நீட் தேர்வு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும். விரும்பினால் தேர்வு எழுதும் நகரங்களை மாற்ற ஒரு வாரம் அவகாசம் தரப்படும் எனக் கூறினார்.
மறுத்தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். நீட் தேர்வுக்கான அனுமதி அட்டை ஜூன் 14ம் தேதிக்குள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் முறைகேட்டை தடுக்கும் வகையில் பிரத்யேக மையங்கள் மூலமாக நீட் தேர்வு இனி ஆன்லைன் வழியாக நடத்தப்படும். ஓஎம்ஆர் தேர்வுத்தாள் முறையை விட கணினி வழித் தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது என்று விளக்கமளித்தார்.


