தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் மத்திய அமைச்சர் ஏன் இடம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
முன்னதாக, தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி (சிஜேஐ) ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தது.
ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அமல்படுத்தி உள்ள புதிய சட்டத்தில் சிஜேஐ-க்கு பதிலாக மத்திய அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம், இந்த சட்டத்தின் அரசியல் சாசன செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்து வருகிறது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி முன்வைத்த வாதங்களை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது மட்டும் போதுமானதல்ல. அது பார்ப்பதற்கும் சுதந்திரமான அமைப்பாகத் தோன்ற வேண்டும்.
தேர்தல் ஆணையம் ஒரு ‘ஜனநாயகத்தின் காவலன்’ என உச்ச நீதிமன்றம் கருதுவதால், நியமனம் வெளிப்படையாகவும், ஆளுங்கட்சியின் ஆதிக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் முக்கிய கவலையாக உள்ளது.
பிரதமர் மற்றும் அவர் நியமிக்கும் மத்திய அமைச்சர் என இருவர் குழுவில் இருக்கும்போது, அது 2:1 என்ற விகிதத்தில் அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.
தேர்வுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவரை வைத்திருப்பது ஒரு “அலங்காரப் பொருளாக” மட்டுமே உள்ளது. உண்மையான அதிகாரம் ஆளுங்கட்சியின் கையில் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.
மூன்றாவது நபர் ஒரு நடுநிலையான நபராக இருக்க வேண்டும், ஆனால் மத்திய அமைச்சர் நடுநிலையானவராக இருக்க முடியுமா? பிரதமர் எடுக்கும் முடிவுக்கு எதிராக மத்திய அமைச்சர் வாக்களிக்க முடியுமா? தேர்வு குழுவில் மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் ஏன் இடம்பெற வேண்டும்? என நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றம் நீதித்துறை மீது எத்தகைய குற்றச்சாட்டையும் சுமத்தலாம். ஆனால், நீதிமன்றத்தின் லட்சுமண ரேகை (வரம்பு) எதுவென்று நீதிபதிகளுக்குத் தெரியும். நீதிபதிகள் ஒருபோதும் அந்த வரம்பை மீறமாட்டோம் என்று கூறினர்.


