மொத்த விலை குறியீடு இந்தியாவில் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நிலையில் உள்ள பொருட்களின் சராசரி விலை மாற்றத்தைக் கண்காணிக்கிறது. இந்த முறை சிறு வணிகர்கள் லாபம் ஈட்ட குறைந்த விலையில் பொருட்களை வாங்க உதவுகிறது. இது நுகர்வோர் வாங்கும் சில்லறை விலையை விட கணிசமாகக் குறைவாக இருக்கும்.
மொத்த விலை பணவீக்க விவரங்களை மத்திய தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை நேற்று வெளியிட்டது.
அதில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில், அதற்கு முந்தைய 42 மாதங்களில் இல்லாத வகையில் மிக அதிகளவாக 8.3% உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 3.88% ஆகவும் பிப்ரவரியில் 2.26% ஆகவும் ஜனவரியில் 1.68% ஆகவும் இருந்த பணவீக்கம், மேற்கு ஆசியப் போரினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததன் விளைவாக, தற்போது 8.3% ஆக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் 1.05% ஆக இருந்த எரிபொருள் மற்றும் மின்சக்தி பணவீக்கம், கடந்த ஏப்ரலில் 24.71% ஆக அதிகரித்திருப்பதும், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வும் இதற்கு முக்கிய காரணமாகும்.
அதே போல் உணவு பொருட்கள், கனிமங்கள், உணவு சாராத பொருட்கள் பணவீக்கம் 9.17% ஆகவும், உணவு பொருட்கள் விலை 2.31% ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும், காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி, மீன் விலை உயர்வும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


