சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று (மே 11) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையான நிலையில், நேற்று முன்தினம் (மே 12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து விற்பனையானது.
இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%லிருந்து 15% ஆக மத்திய அரசு உயர்த்தியது இதன் விளைவாக, 22 காரட் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் காலையில் சவரனுக்கு அதிரடியாக ரூ.8,560 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.1,070 அதிகரித்து கிராம் ரூ.15,400க்கும் விற்பனையான நிலையில், மாலையில், கிராமுக்கு ரூ.400 குறைந்து கிராம் தங்கம் ரூ.15,000க்கும் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 சரிவடைந்து சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.14,950க்கும் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், தங்கம் விலை மாலையில் மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.185ம் சவரனுக்கு ரூ.1,480 குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் 14,765 ரூபாய்க்கும் சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 வரை சரிந்துள்ளது.
வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு மீண்டும் ரூ.5,000 குறைந்து கிராம் ரூ.315க்கும் விற்பனையான நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு மீண்டும் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.305க்கும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து கிலோ கட்டி வெள்ளி விலை 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.


