திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வந்தது.
கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்ததுடன், தேர்தல் விதிகள் அமலுக்கு வரும் முன்பே மகளிர் வங்கி கணக்கில் 3 மாத மகளிர் உரிமைத்தொகையுடன் கோடை சிறப்பு நிதியாக சேர்த்து ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது.
நடந்து முடிந்த தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்துள்ளது. அப்போது வெற்றி பெற்ற முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக, மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 6 திட்டங்களைத் தொடர வேண்டும் என புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் விஜயும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இத்திட்டங்கள் தொடரும் என உறுதி அளித்தார்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியின் போது மகளிர் உரிமைத்தொகையாக ரூ.2,500 வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது போன்று ரூ.1,000 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான மகளிர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


