சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு ஏற்ற எளிமையான வருமான வரி படிவம் (ஐடிஆர்)-1 மற்றும் வருமான வரி படிவம்-4 ஆகியவற்றை, 2025-26 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான (2026-27 மதிப்பீட்டு ஆண்டு) இணையவழி தாக்கல் செயல்முறையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதற்கான இந்த படிவங்கள் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டன.
வருமான வரித்துறை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களுக்கான எக்ஸல் மற்றும் ஆன்லைன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், வரி செலுத்துவோர் இனி எளிதில் வரி தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
தகுதியுள்ள வரி செலுத்துவோர் இப்போதே தங்களின் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, விவரங்களைச் சரிபார்த்துத் தாக்கல் செய்யத் தொடங்கலாம்.
தனிநபர்களுக்கு (ஐடிஆர்-1) வரித் தாக்கல் செய்ய ஜூலை 31, கடைசித் தேதியாகும். அதே நேரம், ஐடிஆர்-4 படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரித் தணிக்கை தேவையில்லாத வணிக நிறுவனங்கள் அவற்றின் ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களை ஆக.31, 2026க்குள் தாக்கல் செய்யலாம். வரித் தணிக்கை தேவைப்படும் நிறுவனங்களுக்கு அக்.31, 2026 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரித் தாக்கல் செய்யத் தவறினால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் ₹5,000 வரை அபராதம் மற்றும் நிலுவைத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும்.
இதில் ஐடிஆர்-1 (சஹாஜ்) படிவம் இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் பயன்படுத்தும் எளிமையான படிவமாகும். இது குறிப்பாக ஆண்டு வருமானம் ₹50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள இந்தியக் குடியுரிமை பெற்ற தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சம்பளம், ஓய்வூதியம், ஒரு வீடு மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் வட்டி போன்ற இதர வருமானங்கள் கொண்டவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ஒரு வீட்டிற்கு மேல் சொத்து உள்ளவர்கள், நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள் அல்லது பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்தவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
ஐடிஆர்-4 (சுகம்) படிவம் சிறு வணிகர்கள், கடைக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிவு 44ஏடி, 44ஏடிஏ மற்றும் 44ஏஇ ஆகியவற்றின் கீழ் உத்தேச வரித் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம். இவர்களின் மொத்த வருமானம் ₹50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
2026-27 மதிப்பீட்டு ஆண்டில், ஐடிஆர்-4 படிவத்தில் வரி செலுத்துவோர் தங்களின் அனைத்து வங்கி இருப்பு விவரங்களையும் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலில் உள்ளது.


