சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் அரக்கோணம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை முதல் மே 31 வரை, சில மின்சார (இஎம்யூ/எம்இஎம்யூ) ரயில்கள் முழுமையாகவும், பல ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் இந்த மாற்றங்களை முன்கூட்டியே கவனத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
அரக்கோணம் பணிமனையில் மே 17, 18ம் தேதிகளில் தண்டவாள தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனையொட்டி, அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி, 5 மணி மற்றும் காலை 6.25 மணிக்கு திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மறுமார்க்கமாக, திருத்தணியிலிருந்து இரவு 9.15 மணி மற்றும் இரவு 11.10 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல், காலை 10.30 மணி, 11 மணி, மாலை 5.15 மணி அளவில் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் திருவாலங்காடு – அரக்கோணம் இடையே பகுதியளவாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை மற்றும் மூர்மார்க்கெட் பகுதிகளுக்கு செல்லும் ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் ரயில்களின் தற்போதைய இயங்கும் நிலை, கால அட்டவணை மற்றும் நேரடி வருகை/புறப்பாடு ஆகியவற்றை அறிய உதவும் தேசிய ரயில் விசாரணை அமைப்பு (என்டிஇஎஸ்) மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


