தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் சராசரியாக 94.31% ஆக உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் தாங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் அனுப்பப்படும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் பாடத்தில் 98.43%, ஆங்கிலத்தில் 99.44%, கணிதத்தில் 97.36%, அறிவியல் பாடத்தில் 98%, சமூக அறிவியலில் 97.93% பாடவாரியான தேர்ச்சி விகிதம் உள்ளது.
இந்த தேர்வை 13,292 மாற்றுதிறனாளிகள் மாணவர்கள் எழுதிய நிலையில் 11,416 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 85.89% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறைவாசிகளின் எண்ணிக்கை 370 ஆகவுள்ள நிலையில், அதில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.68% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,171ஆகும். இதில் 1,931 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாவட்டமாக முதலில் சிவகங்கை, அடுத்தடுத்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமதநாபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், எதிர் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். மாணவர்கள் இடைநிற்றல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று ஏன் வரவில்லை என்ற காரணம் கேட்டு உடனடியாக பள்ளிக்கு வர அழைப்போம். வன்மத்தையோ பகையோ பாராட்டக்கூடிய அரசு கிடையாது. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


