நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைக்கோரி மருந்துக் கடைகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
முறையான சரிபார்ப்பு இன்றி ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவை தடுத்து அடிமையாகும் இளம் தலைமுறையை காக்கவும், உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்தவும், மின்மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தத்திற்கு, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்பதால் மருந்து கடைகள் மூடப்படுகின்றன.
அதே போல், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் மருந்தகங்கள் உள்பட தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மருந்து கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
தமிழகத்தில் சுமார் 35,000 மருந்தகங்கள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதிப்பைத் தவிர்க்க 5,000 மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் மாவட்ட வாரியான உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
நோயாளிகளுக்கான அவசர மருந்து சேவையை உறுதிப்படுத்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்கத்தின் சார்பில் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மருந்து கட்டுப்பாடு இயக்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு தேவையான அவசர மருந்துகளை பெறலாம்.
மருத்துவமனைகள், கிளினிக்குகளில் செயல்படும் மருந்தகங்கள் வழக்கம் போல இயங்கும். வேலைநிறுத்தம் நடந்தாலும் அவசர கால மருந்துகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் உறுதியளித்துள்ளார்.


