தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தேர்ச்சி விகிதம் சராசரியாக 94.31% ஆக உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் தாங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் அனுப்பப்படும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் பாடத்தில் 98.43%, ஆங்கிலத்தில் 99.44%, கணிதத்தில் 97.36%, அறிவியல் பாடத்தில் 98%, சமூக அறிவியலில் 97.93% பாடவாரியான தேர்ச்சி விகிதம் உள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உங்க Career-ஐ உருவாக்கிக் கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.


