சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கடந்த வாரம், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15% ஆக உயர்த்தியதை அடுத்து, மே 13ம் தேதி காலையில் தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 8,560 ரூபாயும், வெள்ளி விலை கிலோவுக்கு 30,000 ரூபாயும் உயர்ந்த போதிலும், மாலையில் கிராமுக்கு ரூ.400 குறைந்து கிராம் தங்கம் ரூ.15,000க்கும் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்களன்று தங்கம் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனையானது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.960ம், கிராமுக்கு ரூ.120ம் குறைந்து விற்பனையாகிறது.
அதன்படி, ஒரு கிராம் 14,870 ரூபாய்க்கும் சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் வெள்ளி விலை நேற்று எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று கிலோவுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.
அதன்படி, கிராம் ரூ.285க்கும் கிலோ கட்டி வெள்ளி விலை 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


