தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனே விஜய் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி அமைக்க முடிந்தது.
மேலும், கடந்த சனிக்கிழமை சென்னை திரும்பிய பொறுப்பு ஆளுநர் அர்லேகரை முதலமைச்சரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த சூழலில், இன்று சென்னை வரும் ஆளுநர் அர்லேகரை முதலமைச்சர் விஜய் மற்றும் அதிகாரிகள் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசித்து, புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, விசிக தலைவர் திருமா தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விசிக மூத்த நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம்பெற வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விசிகவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், அது தொடர்பாக கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள், பொருளாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டுள்ள விசிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் அமைச்சரவையில் விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்எல்ஏவுமான வன்னி அரசு இடம்பெறுவார் எனவும் அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


