தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத், அவிநாசி எஸ்.கமலி, காங்கிரஸ் எம்எல்ஏக்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார், பி.விஸ்வநாதன் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதும், முதலாவதாக வந்தே மாதரம் பாடல், இரண்டாவதாக தேசிய கீதம், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமா, கம்யூ.கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, “இனிவரும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படும்; இந்தத் தவறு மீண்டும் நடக்காது” என தவெக அரசு உறுதியளித்திருந்தது.
இந்த சூழலில் இன்று அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும், முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி அவரது சமூக வலைதளப் பதிவில், “இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில், மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, ‘இனி அவ்வாறு நடக்காது’ என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்து உள்ளார்.


