தியாக திருநாளான பக்ரீத் திருநாளில் என்றென்றும் என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பக்ரீத் பண்டிகை வாழ்த்து செய்தியில், “ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை கடைபிடித்து வாழும் இஸ்லாமிய பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.
இஸ்லாமிய சமூகத்துக்கும் திமுகவுக்கும் இடையேயான உறவு மேன்மையையும் உண்மையான பிணைப்பையும் கொண்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நிற்போம். அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை இந்த நன்னாளில் உறுதி செய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


