சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
சமீப காலமாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. சந்தையில் ஒருநாள் தங்கம் விலை அதிகரித்தால் மறுநாள் அதே தொகையோ அல்லது சற்று குறைவாகவோ சரிவடைகிறது. அதற்கு மறுநாள் மீண்டும் உயர்வது அல்லது குறைவதுமாக இருக்கிறது.
வாரத்தின் முதல் நாளான திங்களன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனையான நிலையில், செவ்வாயன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, நேற்று சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனையானது. இதன் மூலம், கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது.
இந்நிலையில், இன்று 3வது நாளாக ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சவரனுக்கு ரூ.1200ம் கிராமுக்கு ரூ.150ம் குறைந்து விற்கப்படுகிறது. இதனால், கிராம் ரூ.14,500க்கும் சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்திருப்பது நகை வாங்கும் தேவையில் உள்ளோரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அதே நேரம், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கடந்த 22ம் தேதி முதல், 5 நாட்களாக எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், நேற்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து விற்பனையானது.
இந்நிலையில், வெள்ளி விலை இன்று மீண்டும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது. அதன்படி, கிராம் வெள்ளி ரூ.285க்கும் கிலோ கட்டி வெள்ளி விலை 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


