தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் தவெகவினால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூ. கட்சிகள், ஐயூஎம்எல் ஆதரவுடன் தான் தவெக தலைவர் விஜயால் ஆட்சி அமைக்க முடிந்தது.
இதையடுத்து, தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் தவெக அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று அரசு முறை பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
மேலும் அவர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கேவையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்காமல் 2 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் சென்னை புறப்பட்டார்.
தமிழகத்தில் தவெக அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சி தலைவர்களை விஜய் சந்திக்காததால் காங்கிரஸ் தரப்பில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை நேரு அரங்கில் நடந்த விஜயின் முதல்வர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், ராகுலை சந்தித்து விஜய் நன்றி கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட நிலையில், விஜய் அதிலும் பங்கேற்கவில்லை.
அத்துடன், விஜயை வரவேற்று டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் ராகுல் காந்தியை சந்திக்காமல் டெல்லியில் இருந்து விஜய் புறப்பட்டார்.
முதல்வர் விஜயின் இந்த அடுத்தடுத்த புறக்கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


