சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை வெளிவட்டச் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்டச் சாலையில் வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவேடு, வழுதலம்பேடு, சீமாவரம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முழு வெளிவட்ட பாதையில் மொத்தமுள்ள 94 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சுங்க கட்டணம், கார்களுக்கு ரூ.140, இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.230, கனரக கட்டுமான வாகனங்களுக்கு ரூ.750, ஏழு அல்லது அதற்கு மேல் அச்சு கொண்ட வாகனங்களுக்கு ரூ.915 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
தூரத்தைப் பொறுத்து, வண்டலூர் – நசரத்பேட்டை, வண்டலூர் – நெமிலிச்சேரி, வண்டலூர் – பாடியநல்லூர், நசரத்பேட்டை – நெமிலிச்சேரி, பாடியநல்லூர் – மீஞ்சூர் ஆகிய இரு மார்க்கங்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல், ஈசிஆர் உத்தண்டி சுங்கச்சாவடியில் கார், ஜீப்பிற்கு ரூ.50, இலகுரக வணிக வாகனங்களுக்கு ரூ.80 எந்த மாற்றமுமின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதே வேளை, பேருந்து, 2 அச்சு லாரிகளுக்கு 165 ரூபாயிருந்து 170 ஆகவும் 3 அச்சு சரக்கு வாகனங்களுக்கு 180 இல் இருந்து 185 ஆகவும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பல அச்சு சரக்கு வாகனங்களுக்கு 260 ரூபாயில் இருந்து 270 ஆகவும் கனரக கட்டுமான மற்றும் 7 அச்சு வாகனங்களுக்கு 320 ரூபாயில் இருந்து 325 ரூபாயாகவும் சுங்கக்கட்டணம் உயர்ந்துள்ளது.
புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் அடுத்தாண்டு மார்ச் 31 வரை அமலிக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


