அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆய்வு செய்ய சென்ற போது அவரிடம் விரைவு தரிசனத்துக்காக ரூ.4,000 பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாதாரண உடையில் முக கவசம் அணிந்து திடீரென ரகசிய ஆய்வு மேற்கொண்டார்.
அவர் கோயில் வளாகம், அன்னதானம் வழங்கும் இடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், பக்தர்களுடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அன்னதான உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இதையடுத்து, விரைவு தரிசனம் செய்ய பணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தரிசன வரிசையில் முக கவசம் அணிந்து ரகசிய ஆய்வு செய்த போது, அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவு தரிசனத்துக்காக ரூ.4,000 கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் கையில் பணம் இல்லை என்று கூறியதால் ஜிபேயில் அனுப்புமாறு அர்ச்சகர் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆய்வு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.


