கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களின் மீது அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தவிதமான முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
அத்துடன், ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களில் தமிழ்நாட்டில் இயங்கும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநருக்கு பதிலாக மாநிலத்தின் முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்ற மசோதாவும் ஒன்றாகும்.
இந்த சூழலில், முதலமைச்சரே பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்பதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அண்மையில் கூறியிருந்ததற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தான் அவ்வாறு கூறவில்லை எனவும், முதலமைச்சரே முடிவெடுப்பார் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஊசலாட்டமின்றி மாநில உரிமைகளை நிலைநாட்ட தலைமையிலான அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில், “ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக! “ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்” என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.
மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும். மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும் என்று கூறியுள்ளது.


