ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி, 14 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதைத் தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில் பலம்வாய்ந்த ஐதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, நேற்று நியூசண்டிகரில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முகம்மது சிராஜ் வீசிய முதல் ஓவரில், ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த துருவ் ஜுரல் (7 ரன்), காகிஸோ ரபாடா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த ரவீந்திர ஜடேஜா 34 ரன் எடுத்திருந்தபோது காயமடைந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் 11, தாசுன் ஷனகா 3, ஜோஃப்ரா ஆர்ச்சர் 7 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இதையடுத்து, ஜடேஜா மீண்டும் பேட்டிங்கை தொடர களம் புகுந்தார். இதற்கிடையே வைபவ், 31 பந்துகளில் அரை சதம் எட்டினார். தொடர்ந்து அதிரடி காட்டி ரன் வேட்டையில் ஈடுபட்ட வைபவ் (47 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி, 96 ரன்), ரபாடா வீசிய 18வது ஓவரில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை 2வது முறையாக நூலிழையில் பறிகொடுத்து மீண்டும் அவுட்டானார்.
அதன்பின், டொனோவன் ஃபெரெரா, ஜடேஜாவுடன் இணை சேர்ந்தார். கடைசி ஓவரில் ஃபெரெரா 4 சிக்சர்கள் விளாசி அதிரடி காட்டினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் ஜடேஜா 35 பந்துகளில் 45, பெரெரா 11 பந்துகளில் 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் ரபாடா, ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 215 ரன்கள் அடித்தால் வெற்றி என களிமறிங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, பவர்பிளேவில் கேட்ச்சை தவறவிட்டது, மோசமான பவுலிங் போன்றவற்றால் ராஜஸ்தான் அணி மோசமாக தொடங்கியது.
இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 58 ரன்னில் சாய் சுதர்சன் ஹிட் விக்கெட் மூலம் வெளியேறினார்.
கடைசிவரை களத்தில் நின்ற சுப்மன் கில் 53 பந்தில் 104 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதியில் குஜராத் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.


