தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் அவதியுற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அஜித் வீட்டில் அவரது தாயாரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயாரின் இறப்பு செய்தி அறிந்த அஜித்குமார் துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.


