தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
அஜித் உடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் அவதியுற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் அவரது தாயாரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயாரின் இறப்பு செய்தி அறிந்த அஜித்குமார் துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன்.
அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என்று பதிவிட்டுள்ளார்.


