சென்னையில் ஜூன் 1ம் தேதி முதல் புதிய திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை இதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்வே துறையில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் ரயில் சேவைகள் மற்றும் பயணிகளின் தேவைகளின் அடிப்படையில் ஜூன் 1ம் தேதி புதிய கால அட்டவணை வெளியிடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
இந்த புதிய திருத்தப்பட்ட கால அட்டவணை முக்கியமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் அமலுக்கு வருகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு முதல் ரயில் செங்கல்பட்டுக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது தவிர, அரக்கோணம் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்படும் பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை மொத்தம் 48 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை – அரக்கோணத்திற்கு அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மற்றும் ஆவடி – அரக்கோணத்திற்கு காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்படுகிறது.
பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, திருத்தணி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ஜூன் 1 முதல் 5ஆம் தேதி வரை காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


