முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சென்னை ஆர்கே நகரில் போட்டியிட்டு வென்ற மரிய வில்சன் தமிழக நிதித்துறை அமைச்சராக உள்ளார்.
இவர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வருகை தந்தார். அங்கு முழங்காலிட்டு பக்தியுடன் பிரார்த்தித்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றியும் வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆண்டுதோறும் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருவது வழக்கமாக இருந்தாலும், இந்தாண்டு மிகவும் சிறப்பானதாக இருப்பதாக தெரிவித்தார்.
விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், ஆரோக்கிய அன்னையின் அருளைப் பெற வந்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தின் நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அதில் எந்தவித மறைவு இல்லாமல் மக்களுக்கு முழு விவரமும் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக முழு அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அனைத்து தணிக்கை அறிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை வழங்கலில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பிற மாநில பெண்களுக்கும் தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெறுவதாகவும், ரூ.2,500 உரிமைத்தொகை வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


