தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா உள்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 5 நீதிபதிகளில், 4 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாவர்.
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் வி.மோகனா தமிழ்நாட்டில் உள்ள கோவையைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்ற வரலாற்றில் வி.மோகனா 12வது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் வரலாற்றிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் 2வது பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார். இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னாவுடன் சேர்த்து தற்போது 2 பெண் நீதிபதிகள் உள்ளனர். இவர் 2031ம் ஆண்டு ஜூன் வரை 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த ஷீல் நாகு, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டுள்ளார். இவர் 2029ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெறுவார்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த ஸ்ரீ சந்திரசேகர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்திற்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் இவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. இவர் 2030ம் ஆண்டு மே மாதம் வரை பதவியில் இருப்பார்.
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய சஞ்சீவ் சச்தேவா தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக மூன்றரை ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய அருண் பல்லி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


