இந்திய கடற்படையின் தலைமை தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையடுத்து, இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக, இவர் மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கமாண்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார். இவருக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட முக்கிய போர்க்கப்பல்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் உண்டு.
இந்தியக் கடற்படையில் இவர் ஆற்றிய சிறப்பான மற்றும் நீண்டகால சேவையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இவருக்கு இந்த உயரிய பொறுப்பை வழங்கியுள்ளது.
இந்நிலையில், அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நேற்று கடற்படையின் தலைமை தளபதியாக பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்திய கடற்படை தேச நலன்களை பாதுகாப்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்கிறது. பிராந்திய பாதுகாப்பு சூழல் தற்போது மிகவும் சவாலானதாக, சிக்கலானதாக, கணிக்க முடியாததாக மற்றும் நிலையற்றதாக உள்ளது.
இந்த சூழலில் இந்திய கடற்படை, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்கும் வகையில் மிக உயர்ந்த செயல்பாட்டு தயார்நிலை மற்றும் போர்த்திறன்களை பேணுவதை உறுதி செய்வதே எனது முக்கிய முன்னுரிமையாக இருக்கும்” என்றார்.
கடந்த 1987ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைந்த கிருஷ்ணா, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
தேசிய பாதுகாப்பு அகாடமியின் (என்டிஏ) முன்னாள் மாணவரான இவர், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார்.


