வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் ஆகியவை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலலினால், தனியார் நிறுவனங்கள் அவற்றின் பிரீமியம் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன.
அதே போல், வீட்டு உபயோக எரிபொருள் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. வர்த்தக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாத போதும் அதன் வினியோகத்தில் பற்றாக்குறை நிலை ஏற்பட்டது.
கடந்த ஏப்.1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்த நிலையில், கடந்த மாதம் ஒரே நாளில் அதிரடியாக ரூ.990 உயர்த்தப்பட்டு, சென்னையில் ஒரு சிலிண்டர் 3,237 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று மீண்டும் உயர்த்தியுள்ளன.
அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் ஒன்றின் விலை 46 ரூபாய் உயர்ந்து 3,283 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சிலிண்டர் விலை 4 முறை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரம், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 928.50 ரூபாயாகத் தொடர்கிறது.
வர்த்தக சிலிண்டரின் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் தாக்கமாக உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயரக்கூடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலாகும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


