தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த நிலையிலும், மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றும் கூட 14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெயில் தாக்கம், வெப்ப அலை வீசிவரும் நிலையில், வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சமையல் செய்வதை குறைத்து கொள்ளுமாறும், வெயிலில் நீண்ட நேரம் கடுமையான உடற்பயிற்சி அல்லது அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், காலணி அணியாமல் வெளியே செல்லக்கூடாது, மது, தேநீர், காபி, குளிர்பானம், அதிக சர்க்கரை பானங்களை தவிர்க்கும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


