தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால், தவெக நிர்வாகியாக உள்ளார்.
இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை தூத்துக்குடியில் வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்று, ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவைகுண்டம் அருகே தவெக நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது சமூக வலைதள பதிவில், திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதலமைச்சர் விஜய் செயல்பட போவது எப்போது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


