திருச்சி நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
அதிமுக பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்து முதல்வர் விஜய் பேசிய நிலையில், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், எந்த உழைப்பும் கொடுக்காமல், எந்த போராட்டத்தையும் முன்னெடுக்காமல் தேர்தல் களத்தை சந்தித்து அதிகாரத்துக்கு வந்த தம்பி விஜய், தற்போது வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதாக விமர்சித்து உள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் இதுவரை தந்த உழைப்பு, போராட்டக் களத்தை ஒரே ஒருமுறை பட்டியல் சொல்லும்படி கேட்ட உதயகுமார், கஜா புயல், வர்தா புயல், சுனாமி, கொரோனா தொற்று ஏற்பட்ட போது மாங்காய் பறித்துக் கொண்டிருந்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் உழைப்பால் உயர்ந்து தனிப்பட்ட முறையில் உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி இன்று தனி விமானத்தில் செல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறீர்கள், சரி தான். ஆனால் தமிழக மக்களின் உரிமைகளுக்காக இதுவரை என்ன போராட்டம் நடத்தி உள்ளீர்கள், என்ன செய்துள்ளீர்கள்? என்றும் கேட்டுள்ளார்.
நீங்கள் இப்போது நடிகர் விஜய் இல்லை, முதல்வர் விஜய் அதை மறந்து விட்டு இன்னும் நடிகராகவே அனைவரையும் விமர்சனம் செய்து மக்கள் முன் நடித்து கொண்டே இருக்கீங்களே, தம்பி விஜய், நீங்க “எப்போ முதல்வராக” பொறுப்பேற்க போறீங்க என்று நக்கலாக கேள்வி எழுப்பி உள்ளார்.
எங்கள் போதாதா நேரம், காலம் நீங்கள் எல்லாம் எங்கள் கட்சியை அபகரிக்கவும், அழிக்கவும் நினைக்கிறீர்கள். உங்கள் பேச்சில் ஆணவம், அகம்பாவம் தெரிகிறது என்று ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடி உள்ளார்.


