கோடை விடுமுறை முடிந்து 2026-27ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வரும் ஜூன் 4ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் 3 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
பள்ளி திறப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், மாணவர்களும் சொந்த ஊர்களில் இருந்து திரும்புகின்றனர்.
இதனிடையே, வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகிறர்கள். மழை வரும்போது தமிழகத்தில் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு இந்த துறை வேகமாக செயல்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை அந்தமான் பகுதிகளில் தொடங்கி உள்ளது. எதிர்காலத்தில் மழை எந்தளவு பெய்ய உள்ளது என்பது 3 ரேடார்களில் ஆய்வு செய்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. ” எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் வெயில் தாக்கம் குறித்தும் பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் இதுவரை வெயில் தாக்கத்தால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால்தான் பள்ளி திறப்பு ஜூன்1ம் தேதியிலிருந்து 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது 41 டிகிரி செல்சியஸாக இருந்த வெப்பநிலை, தற்போது 35 ஆக குறைந்துள்ளதாகக் கூறினார்.
அந்தவகையில் வெயிலின் தாக்கம் தற்போது குறைந்து, வெயில் மிதமாக இருப்பதால், பள்ளிகள் திறக்க தடையில்லை. அதனால் திட்டமிட்டபடியே நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.


