புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது.
புதிய ஆட்சி அமைந்த பின்னரும் அதிகாரிகள் மாற்றம் பெரிய அளவில் நடந்து வருகிறது.
அந்த வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் தற்போது சிறைத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், தமிழகத்தின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே. சங்கர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) அமலாக்கப் பிரிவில் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படாமல் தற்காலிக பொறுப்பு அதிகாரிகளே பதவியில் இருந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தேர்தல் ஆணையம் சார்பில் சந்தீப் ராய் ரத்தோர் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து வந்தார். தற்போது தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு புதிய நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மகேஷ்குமார் அகர்வால் புதிய டிஜிபியாக பொறுப்பேற்கிறார்.
இந்த மாற்றங்கள் காவல்துறையின் செயல்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்தவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு துறைக்கும் அனுபவமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பது நிர்வாக திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


