தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற்ற பிறகு, ஜி. வெங்கடராமனை தற்காலிகப் பொறுப்பு டிஜிபியாக திமுக அரசு நியமித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்தது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல்வரானதைத் தொடரந்து புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு அனுப்பிய பட்டியலில் 1994 பேட்ச் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வாலை சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு நியமித்தது.
இதையடுத்து எல்லைப் பாதுகாப்பு படையில் கூடுதல் இயக்குநர் பொறுப்பில் இருந்த அவர் நேற்று விடுவிக்கப்பட்டு சென்னை திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து, அவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார். டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வாலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் சட்டம் பயின்றவர். பஞ்சாபி, ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் நன்கு அறிந்தவர். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றிய இவர் 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் மிக்கவராவார்.


