இந்தியாவுக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் பருவமழை பரவலாகத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இன்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் ஜூலை முதல்வாரம் முழுமையாக பரவக்கூடும். வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இம்மாதம் தாமதமாக 3ம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் பல மாவட்டங்களுக்கு மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை மையம் “ஆரஞ்சு” எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 2 முதல் 3 நாட்களில் கர்நாடகா, தமிழகத்தின் எஞ்சிய பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடா நோக்கி இந்த பருவமழை மேலும் முன்னேற சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் கணித்துள்ளது.
பருவமழைத் தொடக்கத்தின் தாக்கத்தால் தமிழக எல்லையோரப் பகுதியான தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப் பொழிவு ஆரம்பித்துள்ளது.
ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரிக்கத்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கலில் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


