புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இதைத் தொடர்ந்து, மே 13ம் தேதி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரங்கசாமி 5வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ரங்கசாமி தரப்பில் இருந்து கவர்னரின் ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே செயல்பட்டு வந்த கவர்னர் மாளிகை இடமாற்றம் செய்யப்பட்டு குபேர் சாலை முகவரியில் (பழைய சாராய வடிசாலை வளாகம்) புதிய கட்டிடத்தில் செயல்படுகிறது. புதிய கட்டிடத்தில் நேற்று பணியை தொடங்கிய கவர்னர் கைலாஷ்நாதன் கோப்புகளை பார்வையிட்டு 3 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 21-55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2500 உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதன் மூலம் 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறுவர். இதற்காக ரூ.16 கோடி 11 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1,96,616 பயனாளிகளுக்கு ரூ.2,500, ரூ.3,000 மற்றும் ரூ.4,000 வழங்க ஏப்ரல் மாதத்திற்கான தொகையாக ரூ.56 கோடி 32 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிப்டிக் நிறுவன பங்குதாரர்களுக்கு (புதுச்சேரி அரசு மற்றும் ஐடிபிஐ வங்கி) பங்குத் தொகை ரூ.37 லட்சத்து 76 ஆயிரத்து 664 மற்றும் சிறப்பு பங்குத்தொகை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


