விஜய் அண்ணாவுக்கு எதுவும் தெரியாது, ஆனால் மக்களை ஏமாற்ற தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், தற்போது தமிழகத்தில் நடந்து வரும் வன்முறைகள் பற்றியும் அவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் தவெக தலைமையையும் கடுமையாக சாடியுள்ளார்.
குற்றங்களை தடுக்க தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது குற்றங்கள் தான் மாநிலம் முழுவதும் புயல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சம்பவங்களை மயிலிறகால் வீசி தடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கை காக்க முதல்வர் எப்போது இரும்பு மனிதராக மாறுவார்? எப்போது உறுதியான உத்தரவுகளை வழங்குவார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் அண்ணா உங்கள் தலைமையிலே தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்பது நமக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது காலம் தான் பதில் சொல்லும். அதுவரை பொறுமையாக கடந்து செல்ல வேண்டுமா என மக்களே தீர்மானிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலே ஒரு நாள் கூட தாமதித்தால் என்ன ஆகும் என்பதை நாடு பார்க்கிறது.
ஓட்டு போட்ட மக்கள் யாரென்று எம்எல்ஏக்களுக்கு தெரியாது. எம்எல்ஏக்களுக்கு தொகுதி எதுன்னு தெரியாது; என்ன ஒரு மாற்றம் பாருங்கள். ‘தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் அனுபவம் தெரியாது, வரலாறு தெரியாது. தியாகம் தெரியாது, பிரச்சினைகளும் தெரியாது, நிர்வாகம் தெரியாது, தொகுதியும் தெரியாது. தொகுதி மக்களின் உரிமையும் தெரியாது, ஆளுமையும் தெரியாது, அதிகாரமும் தெரியாது, அரவணைப்பும் தெரியாது.
ஆக மொத்தம் யாருக்கும் எதுவுமே தெரியாது. ஆனால் மக்களை ஏமாற்ற மட்டும் விஜய் அண்ணாவிற்கு தெரியும் என அவர் காட்டமாக கூறியுள்ளார்.


