கட்சியில் இருந்து விலகும் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் தமிழக பாஜகவின் தற்போதைய நிலை மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்தத் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
கடந்த சில மாதங்களாகவே பாஜக தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மேலும் கூட்டணி மற்றும் இதர அரசியல் சூழல்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக 2025 ஏப்ரல் மாதம் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியும் முழுமையாக ராஜினாமா செய்துள்ளார்.
அண்ணாமலையை தக்கவைக்க அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி அல்லது இணை அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை முயற்சித்தும் அவர் அதை ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கோவை தொகுதியில் அவர் போட்டியிட விரும்பி தலைமை அதற்கு வாய்ப்பளிக்காததும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
திரைத்துறையிலிருந்து அரசியல் களம் புகுந்து மிகக் குறுகிய காலத்தில் தமிழக முதலமைச்சரான நடிகர் விஜய்யின் வரவிற்குப் பிறகு தமிழகத்தினுடைய அரசியல் களம் முழுவதும் மாறிவிட்டதாகவும் விஜய்யை எதிர்த்து அரசியல் செய்யத் தகுதியான மாற்றுத் தலைவர்கள் இங்கு யாரும் இல்லை என்றும் அண்ணாமலை நம்புகிறார்.
இந்நிலையில், அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தேசிய பொதுசெயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.


