தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முழுமையான கூட்டத்தொடராகும்.
17வது புதிய சட்டப்பேரவையின் இந்த முதல் கூட்டத்தொடர் வழக்கம் போல், ஆளுநர் அர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அடுத்த 2 நாட்களுக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, 2026-27 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் அவையில் தாக்கல் செய்யப்படும்.
மேலும், பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அதிமுக விவகாரம் தொடர்பாக இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு மற்ற விவரங்கள் வெளியிடப்படும்.
இக்கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார்.


