சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் புதன்கிழமை (ஜூன் 3) வரை எந்த மாற்றமுமின்றி சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கும் கிராம் ரூ.14,500க்கும் விற்பனையாகி வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஜூன் 4 மற்றும் 5 தேதிகளில் சவரனுக்கு முறையே ரூ.160, ரூ.400 என மொத்தம் ரூ.560 குறைந்து விற்பனையானது.
இந்நிலையில், 22 காரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,840 குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.230 குறைந்து கிராம் ரூ.14,200க்கும் சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதன் மூலம், கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.
அதே நேரம், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கடந்த 29ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை, கடந்த 6 நாட்களாக எந்த மாற்றமுமின்றி விற்பனையாகி வந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் கிலோவுக்கு ரூ.5,000 வீதம் 2 நாட்களில் மொத்தம் ரூ.10,000 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது.
அதன்படி, கிராம் வெள்ளி ரூ.270, கட்டி வெள்ளி விலை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 மற்றும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்திருப்பது திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்கும் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


