கேரளாவில் வழக்கத்தை விட 3 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை கடந்த 4ம் தேதி தொடங்கி பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வட கேரளா முழுவதும் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று பாசில் மிஷனரி பள்ளி ஒன்றின் பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் ஒன்று, அருகிலிருந்த சாலையின் மீது சரிந்து விழுந்தது. கட்டமைப்பு ரீதியாக பலவீனமாக இருந்ததை தொடர்ந்து சமீபத்தில் தான் இப்பள்ளியின் கல் சுவர் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் பெய்த தொடர் கனமழையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் முழுமையாக இடிந்து விழுந்தது. இந்த சுவர் இடிந்து விழும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக சுவர் இடிந்து விழுந்த நேரத்தில் அப்பகுதியிலோ அல்லது சாலையிலோ மாணவர்கள் அல்லது பொதுமக்கள் யாரும் இல்லாததால், பெரும் துயரச் சம்பவம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கேரள அரசு, மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


