தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களின் மலைப்பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அதே போல், தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் வரும் 8ம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் 9ம் தேதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது.


