முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூட இருந்த நிலையில், வாய் திறங்க சி.எம் என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், “வாய் திறங்க CM” என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும் வகையில் திரையில் நாயகன்; தரையில் வில்லன், கதறல் கேட்குதா சி.எம், வாயில் ஏதாவது வருமா சி.எம்? மாஸ்டர் வாயில் பிளாஸ்டர் என்ற பல சாட்டையடி வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்க்கு எதிராக முழக்கமிட்டனர்.
மேலும் முதல்வர் விஜயின் ஹைலைட் வாசகமான தூய சக்தி என்பதை விமர்சிக்கும் வகையில் தூய சக்தி அல்ல, துயர சக்தி என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தி திமுக எம்.எல்.ஏ-க்கள் முழக்கமிட்டனர்.
இவை தவிர, சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?, ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே? மாஸ்டர் வாயில் பிளாஸ்டர், திரையில் HERO இல்ல.. தரையில் ZERO, தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்திக்கொண்டு முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர்.


